...

3 views

🐘மீயாழ் நுவலி 💃
ஒரு கோடிமுறை உன் ஈரக்கூந்தலில்
நான் குதூகலித்துக் கொள்கிறேன்...

வெள்ளருவி கருத்து உன் கூந்தல்
வழிந்து என் விழி உறையட்டும்...

உன் காது மடல்களில் இளைப்பாறும் நீர்த்துளிகளுடன் உன்னைப் பற்றி கதைத்து கதைத்தே அவைகளை
கறைந்துருக வைக்கிறேன்...

என் சொல்லாடலின் திறத்தில்
திரவமயக்கத்திலிருந்த
மயிர்கால்கள் எல்லாம்
உன் தேகஞ்சிலிர்த்து உய்த்தெழட்டும்...

உன்மார்நிறம்பி வெளியூதும்
கணத்தப் பெறுமூச்சின்
வெப்பத்தில் வெந்து தணியட்டும்
வீணான வேழமென்னகத்தே - உன்னால்
வேகாத அணுவிருப்பின்...

கோலேந்தித் தொழில்செய்யும்
கோநாட்டின் தலைமகனை
வேலேந்தி அழித்தொழிக்க
விழிகளுக்கோ பயிற்றுவித்தாய்...

வாகான பரியேரி
வாளேந்தி வந்தவனை...,
மீயாழ் நுவலி - நின்
நயமான நவிதலாலே
வாலாட்டும் ஞமலிபோலே
வசியந்தான் செய்துவிட்டாய்...

தேரேறி போர்களத்தில்
திமிராக நின்றவனின்
மேலேறி மென்னமுதாய்
தோல்தேங்கி நின்றபோது...

கோதாத கேசமதில்
போகமது கொண்டழைந்து
தோதாக தொலையுங்கலை
துதித்தொழுது கற்கவைத்தாய்...

போதாத குறையாக
போர்வாளை நீ உருவி
பொற்கரத்தால் பிடிஇறுக்கி
புதிர்கோல கீறல்கள்
புடைநெஞ்சில் நீ தீட்ட...

விடையது யாதென
விவரங்கள் அறிந்திடவே
விரைவாக விழியருகே
விரைந்தவன் நான்தானே...

நரந்தை நறும்புல் மிசை
விண்ணாயும் பனியதுவோ
ஈர்ங்கதிர் இறங்கியதும்
எதிர்வரும் சுடரொளியில்
இல்லாது போவதுபோல்...

விடியலது தொடங்கியதும்
விலகாத ஒளிபோலே
வியாபித்த வெளிச்சத்தில்
விழியெட்டும் கணம்முன்னே
வினையற சுழியானேன்
வீணாய் பலியானேன்...

எண்ணம் : *முத்தரசு மகாலிங்கம்*..©
~ * ~
(வரைவுகளில் வைக்கப்பட்டிருந்த கவிதையை வரைந்து முடித்து தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்)
தொடங்கியது - 17 Aug 2021
முடித்தது - 10 Sep 2023

அருஞ்சொற்பொருள் அறிக.

வேழம் - வெள்ளை ஆண்யானை
மீயாழ் - மேன்மையான யாழ்
நுவலி - பேச்சிற்கு அரசி, சொல்லரசி
நவில்தல் - மென்மையாக பேசுதல்
ஞமலி - நாய்
நரந்தை நறும்புல் - நரந்தை எண்ணும் நறுமணம்மிக்க புல் (lemon grass)
ஈர்ங்கதிர் - குளிந்த ஒளிதரும் சந்திரன்
வினையற - செயலற்றுப் போதல்
சுழி - சூன்யம், பூச்சியம்