...

10 views

வாகைசூட விடு...
நறுந்துணர் குழல் கோதி
பெருங்கொன்றைப் பூச்சூடி
பெருந்துயர் தந்தாயே...

கல்லால நிழல் தாங்கி
சொல்லாழா மொழி நவிலும்
பொல்லாதச் சுடர்விழியே...

செல்லாத திசையெல்லாம் - தினம்
சொப்பனத்தில் வருகுதடி...

கொல்லாத களம் நோக்கி - மனம்
பல்லாக்கில் போகுதடி...

செங்கருங்கால் அடியார
புல்லுருவி நிலம்போலே
செவ்விதழே என்நெஞ்சை
செய்துவிட்டதேனோ...

புலராத வேளையிலும்
புல்நுனிப் பனிப்போலே
புடைநெஞ்சில் துயிலுரும்
பொன்னறும் பூமகளே...

புதுமேகம் வானில்
புலம் பெயருவது போலே...
புண்டரீகத் தீவே
உனை தினம் சுமப்பேனே...

ஆயிரங் காலூன்றி
ஆருமறியாது கனியுள்ளே பூ பூக்கும்
அகல்மரம் நானே - உன்னால்
அகர் போலேவானேன்...

அருந்தேனே நீயும்
அரிட்டமாய் கசந்தாலும்...
அரைமரமாகியே
அகம்பிணைப்பேனே...

கருவேல முட்கள்
நீ கொண்டபோதும்
களைப்பாற நானும்
தினம் வருவேனே...

கோடிப் பூ பூக்கும்
கொடிமுல்லைப் போலே
கூட்டின் உயிர்ச் சூழும்
கோதையானவளே...

கோணிச் சிணுங்கி எனை
கோட்டியாக்காது
கொட்டிச் சிரித்து உடன்
வாகைச் சூட விடு...

~*~

அருஞ்சொற்பொருள் அறிக:

நறுந்துணர் குழல் - (நறு)மணமுடைய (துணர்) கொத்தாக இருக்கும் (குழல்) கூந்தல்

செங்கருங்கால் அடியாரம் - அடி பெருத்த செம்மரம் (சந்தனமரம்)

புல்லுருவி - ஒட்டுண்ணி

புண்டரீகம் - வெண்தாமரை

அகல்மரம் - ஆலமரம்

அகர் - மணமுள்ள உயர் வகை மரம்

அரிட்டம் - வேம்பு

கோட்டி - பித்தன்

அரைமரம் - அரசமரம்
© Mutharasu Mahalingam