...

1 views

பார்வைக் கோணங்கள்
ஒருவன் வரம் வேண்டி கடவுளை நோக்கிக் கடுமையாகத்
தவம் புரிந்தான்.

கடவுளும் அவன் முன் தோன்றி,
*"என்ன வரம் வேண்டும்"*
என்றார்.

*"மற்றவர்கள் என்னைப் பற்றி மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்கின்ற திறன் வேண்டும் சாமி"*
என்றான்.

கடவுளும் அவன் கேட்டபடி வரம் கொடுத்து மறைந்தார்.

சில நாட்களிலேயே பக்தன் அழுது புலம்பி கடவுளை அழைத்து,
தயவு செய்து இந்த வரத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்
என்றான்.

*"ஏன்? என்னாயிற்று"*
என்றார் கடவுள்.

*"பலரும் என்னைப்
பொய் சொல்கிறவன்,
பொறாமை பிடித்தவன்,
துரோகி,
கொள்ளையடிப்பவன்,
சோம்பேறி,
நயவஞ்சகன்...
-என்றெல்லாம் நினைக்கிறார்கள்.
என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை சாமி"*
என்றான்.

*"ஓ! இதுவா இந்த முடிவுக்குக் காரணம், சரி, நீ இந்தக் காலை வெயிலில் இங்கிருக்கும் அரச மரத்தடியில் கண்களை மூடிப் படுத்துக் கொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கவனி"*
என்றார் கடவுள்.

கடவுள் சொன்னபடி செய்தான் பக்தன்.

உழைப்பாளி ஒருவன் அந்தப் பக்கம் வந்தான்.
*'இரவு கடுமையான வேலை போல, அசதியில் வெயில்கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறான்'*
என்று சொல்லிவிட்டுப் போனான்.

அடுத்து ஒரு குடிகாரன் வந்தான்.
*'யார்ரா இவன்? இந்த வெயிலில் நினைவில்லாமல் படுத்திருக்கான், காலையிலேயே குடிச்சிட்டு மட்டையாயிட்டான் போல'*
என்று சொல்லிவிட்டுப் போனான்.

பிறகு ஒரு திருடன் வந்தான்.
*'ராத்திரி பூரா நம்மைப் போல கொள்ளையடிச்சுட்டு வந்திருப்பான் போல, இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறான்'*
என்று சொல்லிச் சிரித்துவிட்டுப் போனான்.

ஒரு நோயாளி அந்தப் பக்கம் வந்தான்.
*'ரொம்ப உடம்பு முடியல போல, அதான் சுருண்டு படுத்துக் கிடக்கான். பாவம்!'*
என்று சொல்லிவிட்டுப் போனான்.

சற்று நேரத்தில்
ஒரு துறவி வந்தார்,
*'யாரோ முற்றும் துறந்த ஞானி போல, வெயில் கூடத் தெரியாமல் தன்னை மறந்த நிலையில் இருக்கிறார்'*
என்று சொல்லிவிட்டுப் போனார்.

சிறிது நேரம் கழித்து, கடவுள் "பக்தனிடம் வந்து பார்த்தாயா.!? உன்னைப் பற்றி, அவரவர்களுக்கேற்ப புரிந்து கொள்கிறார்கள். இனி உன்னைப் பற்றிய அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்றோ, அவர்களின் விமர்சனங்களைப் பற்றியோ பொருட்படுத்தாதே! ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும். ஒரு பார்வை இருக்கும்"

எனவே,
"உன்னுடைய பாதையில் நீ தைரியமாக பயணி. வெற்றி உனக்குத்தான்" என்றார்.

நாமும் தெளிவடைவோம்


🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

//பார்த்ததில் படித்தது
படித்ததில் பிடித்தது
பிடித்ததில் பகிர்ந்தது//